ஈரானிய பாராளுமன்றத் தேர்தல் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.
மேற்படி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத்துக்கான 290 ஆசனங்களுக்கு 4,844 பேர் போட்டியிடுவதாகவும் 1,385 வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் தேர்தல் தலைமையகத்தைச் சேர்ந்த மொஹமட் ஹெபஸைன் மொகிம் தெரிவித்தார்.
மேற்படி வேட்பாளர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு உள்துறை அமைச்சர் அப்டோல்ரஸா ரஹ்மானி பாஸ்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு ஆசனங்களுக்கும் தற்போது சுமார் 17 பேர் போட்டியிடுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
மொத்த வேட்பாளர்களில் 10 சதவீதத்தினராக பெண் வேட்பாளர்கள் உள்ளனர். சுமார் 100 பெண் வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுள்ள நிலையில் சுமார் 500 பெண் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அரசாங்க ஆதரவு வேட்பாளர்களில் ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹாணியின் ஆதரவாளர்களான சீர்திருத்தவாதிகளும் பழைமைவாதிகளும் உள்ளடங்குகின்றனர்.
பிரதான பழைமைவாத வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கோலம் அலி ஹட் டாட் அப்டெல் முன்னிலையில் உள்ளார். அவரது மகள் அந்நாட்டு உச்ச நிலைத் தலைவரான ஆயத்துல்லாஹ் கமெய்னியின் மகன்மாரில் ஒருவரைத் திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தலைநகருக்கு வெளியிலான பெறுபேறுகள் தேர்தல் நிறைவுபெற்று 24 மணி நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தலைநகரிலான தேர்தல் பெறுபேறுகள் வெளிவருவதற்கு 3 நாட்கள் வரை செல்லலாம் என எதிர்வு கூரப்படுகிறது.
தலைநகரில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களை 12 மில்லியன் மக்கள் தெரிவுசெய்யவுள்ளனர்.
அத்துடன் ஈரானின் அடுத்த உச்சநிலைத் தலைவரை தெரிவுசெய்யவுள்ள அதி அதிகாரத்துவம் பொருந்திய நிபுணத்துவ சபைக்கான 88 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் முதல் தடவையாக ஒரே தினத்தில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.