ஈராக்கின் திகார் மாகாணத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் திகார் மாகாணத்தில் நசிரியா பகுதியில் சாலையோர உணவகம் ஒன்றில் இன்று(15) தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இதைதொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளான்.
இவ்விரண்டு தாக்குதல்களிலும் சுமார் 52 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதில் ஈரானியர்கள் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அம்மாகாண துணை மருத்துவ அதிகாரி உறுதிசெய்தார்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றதாக கூறப்பட்டுள்ளது.