ஈராக் சந்தை பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு…

ராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள நஹ்ரவான் சந்தைப்பகுதியில் இரண்டு ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஈராக் இராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி நடைபெற்றும் தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். கூட்டம் அதிக உள்ள பகுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திவரும் தற்கொலைப்படை தாக்குதலில் அதிகபடியான அப்பாவி பொதுமக்கள் உயரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகரான பாக்தாத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நஹ்ரவான் சந்தையில் இன்று காலை ஐந்து தீவிரவாதிகள் நுழைந்ததையறிந்த பொலிஸார் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதி்கள் கொல்லப்பட்டனர்.

இருப்பினும் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 31 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என இராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

11 அப்பாவி பொதுமக்களின் உயிரைப்பறித்த இந்த கொலைவெறி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.