தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ரா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் இடையே வன்முறை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக் நாட்டில் நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஸ்ரா நகரில் கடந்த திங்கட்கிழமை உள்ளூர் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்புப்படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.
இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை காரணமாக பாதுகாப்புப்படையினரால் நேற்று அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னரும் போரட்டங்கள் நடைபெற்றதில் போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் 14 பேர், பாதுகாப்புப்படையை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.