ஈரானின் சில்மிஷத்தை எதிர்கொண்டு முறியடிப்போம் – சவுதி மந்திரி

அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் வேளையில் அந்த பணக்கொழுப்பில் சவுதிக்கு எதிராக ஈரான் சில்மிஷ வேலைகளில் இறங்கினால் அதை தகுந்த வகையில் எதிர்கொண்டு, முறியடிப்போம் என சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி அடல் அல் ஜுபைர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அடல் அல் ஜுபைர் கூறியதாவது:-

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் அமைதியை விரும்புகின்றன. ஈரான் மீதான சர்வதேச பொருளாதார தடை நீக்கத்தை அந்நாட்டுக்கு மிகவும் சாதகமான ஒரு அம்சமாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை வைத்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

அதை தவிர்த்து இந்த பிராந்தியத்துக்குள் சாகசம் செய்ய முயற்சிக்கும் வகையில் எங்களுக்கு (சவுதி அரேபியா) எதிரான சில்மிஷ வேலைகளில் இறங்கினால் அதை தகுந்த வகையில் எதிர்கொண்டு, முறியடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சவுதி அரேபியாவின் நேசநாடான ஏமனில் ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள ஹவுத்தி படையினருக்கு ஈரான் மறைமுக ஆதரவு அளித்து வருகின்றது. ஈரானின் போக்கை எதிர்க்கும் வகையில் ஏமன் அரசுக்கு ஆதரவாக இந்த உள்நாட்டுப் போரில் சவுதி குதித்துள்ளது.

ஹவுத்தி போராளிகளை தீர்த்துக்கட்டும் நோக்கத்தில் சவுதி விமானப்படைகள் அங்கு குண்டுமழை பொழிந்து வருவது நினைவிருக்கலாம்.

(riz)