ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனை சிதைவடைந்த ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் பிரஜையென்ற என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க ஆயத்தம் மேற்கோள்வதாக ஈரான் கூறியுள்ளது.
”தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், ஈரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்” என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
2015 இல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டன.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் முன்னெப்போதும் இல்லாத அளவு அமெரிக்கா வருத்தப்பட நேரிடுமென ஹசன் ரஹானி ஏற்கனவே அறிவித்திருந்தார்.