(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அந்த அமைப்பின் ஊடக அதிகாரி சம்பந்தம் தொடர்பில் சர்வதேச புலனாய்வு சேவை ஒன்று, இலங்கை அரச பாதுகாப்பு தரப்பனிருக்கு வழங்கிய இரகசிய தகவல் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு கோரி, பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமது அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்பதால், சர்வதேச புலனாய்வு சேவை தகவலை விநியோகித்த விதம் மற்றும் அதற்கு ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவான விசாரணை செய்யுமாறு பொதுபல சேனா, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு நடந்த மிகவும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுடன் பொதுபல சேனாவை சம்பந்தப்படுத்தும் சர்வதேச சதித்திட்டங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
திலந்த விதானகே இது சம்பந்தமாக ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமும் இதனை தெரியப்படுத்தியிருந்தார்.