ஆட்சியினை கவிழ்க்கும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘லங்கா ஈ நியூஸ்’ இணையத்தளத்திற்கு எந்தவொரு விளம்பரங்களையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச அதிகாரி ஒருவருக்கு கட்டளையிட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்ததொரு அமைச்சரின் கீழ் இயங்கும் நிறுவனமொன்று நேற்று வரை குறித்த ஊடகத்திற்கு விளம்பரம் வழங்கியிருந்த நிலையில் ஜனாதிபதியின் கட்டளைக்கு இணங்க நேற்றுடன் குறித்த விளம்பரம் மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ‘லங்கா ஈ நியூஸ்’ இற்கு விளம்பரம் பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திய ஜனாதிபதி செயலாளர் அலுவலக அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் விளம்பரங்களை நிறுத்துமாறும் கட்டளையிட்டுள்ளதாக குறித்த ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
‘பிணை முறி மோசடியாளர்கள், வெளிநாட்டில் இயங்கும் ஊடகமொன்றுக்கு பணம் வழங்கி எனக்கு சேறு பூச முனைகின்றனர்..” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக ‘லங்கா ஈ நியூஸ்’ இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை தொடர்ந்தும் விமர்சித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சிக்கு வித்திட்டு மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் நேற்று(08) பங்கேற்ற ஜனாதிபதி, மோசடியாளர்களை பிடிக்க இன்னுமொரு ஆணைக்குழு நியமிக்கவுள்ளோம், அதில் வெளியாகும் கள்வர்கள் வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு பணம் வழங்கி என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த செய்தி இணையத்தளமான ‘லங்கா ஈ நியூஸ்’ செய்தித் தளம் நேற்று(08) நண்பகல் முதல் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
E-######