உக்ரைன் நாட்டு எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ, அருகில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான விமான தளத்திற்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கீவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில், இந்த எண்ணெய் கிடங்கு உள்ளது. இதில், பெட்ரோல் சேமிப்பதற்காக, தலா, 900 கியூபிக் மீட்டர் கொள்ளளவு உள்ள, 17 பெரிய தொட்டிகள் உள்ளன. கடந்த 8ம் தேதி மாலை, இந்த எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைக்கும் பணியில், 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ பரவியதில், எட்டு எண்ணெய் தொட்டிகள் வெடித்து சிதறின. இதில், தீயணைப்பு வீரர்கள் பலர் பலியாயினர்.
எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் புகைமூட்டம், பல கி.மீ., தொலைவுக்கு தெரிந்தது. இந்த கிடங்கு, வாசில்கீவ் கிராமம் மற்றும் ஹிளவாகா விமான படை தளத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ காரணமாக, விமான தளத்திற்கு சேதம் ஏற்படக்கூடும் என, ராணுவத்தினர் அஞ்சுகின்றதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.