உடலில் பச்சை குத்தி இருந்தால் வேலை கிடையாது…

உடம்பில் பச்சை குத்தி இருந்தால் விமானப்படை வேலையில் இணைந்துகொள்ள முடியாது என டெல்லி மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விமானப்படையில் இணைந்துகொள்வதற்காக தனது பணி நியமன ஆணை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் டெல்லி மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் உடம்பில் நிரந்தரமான பச்சை குத்தியிருந்ததால், பணி நியமனம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது பச்சை குத்தி இருந்தால் வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளது. விமானப்படை விளம்பரத்தில் கூறப்பட்ட விதிவிலக்கின் கீழ் மனுதாரர் வரமாட்டார். உடம்பில் பச்சை குத்தியிருந்தால் அதுதொடர்பான புகைப்படத்தை அனுப்ப வேண்டுமென்ற விதிமுறையையும் மனுதாரர் முறைப்படி செய்யவில்லை. அதனால் வேலை நியமனத்தை இரத்து செய்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது.

உடலில் பச்சை குத்தி இருந்தால் வேலை கிடையாது என இந்திய விமானப் படை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.