2019ஆம் ஆண்டு தொடக்கம் உயர் தரப் பரீட்சையையும், சாதாரண தரப் பரீட்சையையும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியசம் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் நடக்கும் மிகப் பெரிய பரீட்சைகளான உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாணவர்களுக்குப் பல்வேறு அனுகூலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காகவோ தொழிலுக்காகவோ செல்லும் இலங்கையர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் பரீட்சைச் சான்றிதழின் பிரதியொன்றைச் சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இந்நடவடிக்கையின் மூலம் வெளிநாடு செல்பவர்கள் தங்களது பரீட்சை சான்றிதழ்களில் மோசடி செய்வதை முற்றாகத் தடுக்க முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.