உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 200 மில்லியன் தேடும் பாரிய பணியில் நீங்களும் இணையுங்கள்

உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இது ஒரு கொடூரமான நோயாகவே சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றது.

நவீன தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் குறித்த புற்று நோய்க்கும் தீர்வாக இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் அதற்கான நிதியினை திரட்டுவது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

சுமாராக, இலங்கையில் வருடாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இந்நோயைப் பரிசோதிப்பதற்கான குறித்த தொழில்நுட்ப “பெட் ஸ்கேணர்” இயந்திரம் ஒன்று மகரகம வைத்தியசாலையில் இல்லாமையானது இவ்வைத்தியசாலைக்கு பெரும் குறையாகவே காணப்படுகின்றது.

குறித்த இந்த இயந்திரம் சுமார் 20 கோடி ருபாவாகும். இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்ய இலங்கையில் உள்ள தனவந்தர்களை உதவுமாறு மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய வேண்டிக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

இந்த இயந்திரம் ஒன்று இல்லாத குறையால் குறித்த பரிசோதனைக்காக நோயாளியை தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டியுள்ளது.

அதுவும், ஒரு பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலையில் 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவினை அறவிடுகின்றனர்

சத்திர சிகிச்சை ஒன்றுக்காக 6இலட்சம் ரூபாவை தனியார் வைத்தியசாலையில் அறவிடுகின்றனர். ஒரு புற்று நோயாளிக்கு குறைந்தளவு 65 இலட்சம் ரூபா செலவளித்தால் நோயிலிருந்து தப்பலாம் என்பது யூகம்.

இன்னும், மகரகமவில் லியூகேமியா நோயினால் வருடாந்தம் சுமார் 300 சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். 200சிறுவர்களுக்கு மட்டுமே தங்கி நின்று மருத்துவம் பெறுவற்கான கட்டில்கள் உள்ளது.

இவ்வாறிருக்க, குறித்த புற்றுநோய் பரிசோதனைச் செலவினை தனியார் வைத்தியசாலையில் பெற சாதாரண ஏழை மகனுக்கு முகம் கொடுக்க முடியாதுள்ளது. குறித்த பெட் இயந்திர வருமானம் அங்கு ஒரு மாபியாவுக்குச் செல்கின்றது.

அதற்காகவே தனது உறவினரொருவரை மகரகமவில் அனுமதித்த கதீஜா நம்பிக்கை நிதிய தலைவர் மொஹமட், என்னைச் சந்தித்தார். இந்த ஸ்கேனர் பற்றி என்னிடம் கேட்டார். அவரே இந்தியா மற்றும் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கோடிக்கணக்கில் செலவழித்து விட்டு இறுதியாக மகரகம வைத்தியாசலையிலேயே தனது உறவினருக்கு மருந்து செய்து வருகின்றார்.

குறித்த பெட் மெசினைப் பெறுவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனுமதி பெறப்பட்டுள்ளது. மகரகம வைத்தியாலையின் பெயரில் வங்கிக் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் அன்பளிப்புக்களை வழங்கலாம். இதனை நேரடியாக பார்வையிடலாம். கணக்கு விபரத்தை எமது வைத்தியசாலையில் வந்து பரிசோதிக்க முடியும்.

இன்னும், இதனை ஒழுங்குபடுத்தும் செயலில் மட்டுமே தனவந்தர் முஹம்மட் இறங்கியுள்ளார். இதனைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய அன்பளிப்பு வழங்குநர்களை சேகரித்து தருவதற்கும் அவர் முன்வந்துள்ளார்.

இந்நோயினால் அவதியுறுவோருக்கு தமது வருமானத்தில் ஆகக் குறைந்தது 100 ரூபாவையேனும் செலவழித்தால் இந்நாட்டில் 3 மாதத்திற்குள் இந்தப் பணத்தை நாம் பெற்றுவிடலாம்

இம்மெசினுக்கு 200 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது. உரிய ஜேர்மன் கம்பனியும் உள்ளூர் ஏஜென்சி இலங்கை டெமோ கம்பனியும் இத்தகவலை அறிவித்துள்ளது.

இதற்காக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் கொண்ட ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு ஆரம்பக் கூட்டத்தினையும் மொஹமட் ஏற்படுத்த உள்ளதாக டாக்டர் விஜேசுரிய மேலும் தெரிவித்தார். என மகரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மொஹமட் தலைமையில் மகரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்கனர் மெசின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு நிதியத்தை ஏற்படுத்தி இந்த 20 கோடி ரூபாவை சேகரிப்பது பற்றிய ஆரம்பக் கூட்டம் ஒன்றையும் கொழும்பில் நடாத்தினர்.

இதில் முஸ்லிம் சமய பணிப்பாளர் சாமில் மற்றும் டெமோ கம்பனியின் பணிப்பாளர் வங்கியாளர்கள் முஸ்லிம் வாத்தகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்திற்காக முஸ்லிம் வர்த்தக, சாதாரண மக்கள் மற்றும் அரச தனியார் ஊழியர்கள் உதவுவதற்காவே இந்த ஆரம்பக் கூட்டத்தை கூட்டியதாகவும் மொஹமட் மேலும் தெரிவித்தார்.

2ம் கட்ட நடவடிக்கையாகவே குறித்த விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மண்டப அரங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி கூடவுள்ளதுடன் அனைத்து சமூக ஆர்வலர்களையும் பங்குபற்றி ஒத்தாசை வழங்குமாறும் கதீஜா நம்பிக்கை நிலையம் வேண்டி நிற்கின்றது.