(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தியவரின் தந்தை விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். இத் தகவலின் பின்னர் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும், அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும், பஷீர் சேகுதாவூத் தனது பதிவில் விவரித்திருந்தார்.

அவருடை தந்தை தொடர்பாக பிபிசி ஊடகம் பல விதமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பிபிசி தமிழ் இடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் நாம் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த – ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது” என்றார்.
நஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ஆம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது
நஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் ‘அந்த சம்பவம்’ பற்றி பிபிசி தமிழ் ஊடகத்திற்கு பேசியுள்ளார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு பொலிஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்” என்றார் அந்த அயல்வீட்டுக்காரர்.
நஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.

ஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். நஸாருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளில் ஒருவர்தான் ஆசாத் ஆவர்.