தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த அணியும் அச்சத்தில் உள்ளோம்.. – திமுத் கருணாரத்ன…

(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் இருந்து சம்பவத்தால் தான் உள்ளிட்ட இலங்கை வீரர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“உயிர்த்த ஞாயிறன்று காலை நாட்டில் இடம்பெற்ற எதிர்பாரா சம்பவத்தினால் நாட்டிலுள்ள அனைவரும் அச்சத்துக்கு உள்ளாகினர். அதேபோல தான் கிரிக்கெட் வீரர்களும். எமது மனதிலும் இன்னமும் அச்சம் குடிகொண்டுள்ளது. இதனால் அனைவரது அன்றாட வேலைகளும் தடைப்பட்டன.

அத்துடன், இந்த தாக்குதலினால் எமக்கு திட்டமிட்டபடி பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் நாம் கிடைத்த காலத்தைப் பயன்படுத்தி உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தோம்.

உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான தொடர்களில் விளையாடுகின்ற போது அனைத்து வீரர்களுக்கும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். எமக்கான பயிற்சிகள் ஆரம்பமான நாளைவிட தற்போது அனைத்து வீரர்களினதும் மனநிலை நல்ல நிலையில் இருக்கின்றது என நான் நம்புகிறேன்.

உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நாம் அங்கு சென்று ஒருசில போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதனால் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். முதலில் ஸ்கொட்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதன்பிறகு உலகக் கிண்ணத்துக்கான 2 பயிற்சி போட்டிகள் உள்ளது. அந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் தான் தற்போது நாங்கள் ஈடுபட்டோம். எனவே, உலகக் கிண்ணத்தில் எமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு போட்டியையும் வெற்றியுடன் முடிப்பதுதான எமது திட்டமாக உள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் எமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என அவர் தெரிவித்தார்.