உருளை கிழங்கை பயன்படுத்தி கருவளையத்தை போக்குவது எப்படி?

தூக்கத்தில் குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு அட்டவணை, ஆரோக்கிய கோளாறுகள், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட நேரம் கணனியில் வேலை செய்வது, போன்றவற்றால் கரு வளையம் ஏற்படுகிறது.
உருளை கிழங்கில் இயற்கையாக ப்ளீச்சிங் தன்மை உண்டு. இதனால், கண்ணுக்கு கீழ் உள்ள பகுதியின் கரு வளையங்கள் நீக்கப்படுகின்றன. உருளை கிழங்கில் விட்டமின் சி , விட்டமின் ஏ , ஸ்டார்ச், என்சைம்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, கண்ணனுக்கு கீழே கரு வளையத்தை தடுக்கிறது.

உருளை கிழங்கு சாறு :
உருளை கிழங்கு சாறாக அல்லது துண்டுகளாக பயன்படுத்தி கருவளையத்தை போக்கலாம்.
வழிமுறை: ஒரு பெரிய உருளை கிழங்கை எடுத்து தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாறை , குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு அந்த சாறை எடுத்து, சிறிது பஞ்சை அந்த சாறில் நனைத்து கருவளையத்தில் வைக்கவும். 15 நிமிடங்கள் அந்த பஞ்சை கண்ணில் இருந்து எடுக்க வேண்டாம். பிறகு பஞ்சை எடுத்து, குளிர்ந்த நீரால் கண்களை கழுவவும். கருவளையம் நீங்கும் வரை இந்த முறையை தொடர்ந்து செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு :
வழிமுறை : ஒரு உருளைகிழங்குடன் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த விழுதை குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைக்கவும். இந்த விழுது குளிர்ந்தவுடன், அதில் பஞ்சை நனைத்து, கண்களில் வைக்கவும். 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் 3-4 முறை இதனை செய்து வரவும்.

உருளை கிழங்கு மற்றும் யோகர்ட் :
வழிமுறை: ஒரு உருளை கிழங்கை துருவி, சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாறை 1 ஸ்பூன் எடுத்து, அதில் 1 ஸ்பூன் யோகர்டை சேர்க்கவும். அந்த கலவையில் பஞ்சை நனைத்து, கண்களில் வைக்கவும். 15 நிமிடம் கழித்து கண்களை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்யவும். இந்த முறையை தொடர்ந்து தினமும் செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் ஆப்பிள் :
வழிமுறை: ஒரு உருளை கிழங்கு மற்றும் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் வெட்டி, அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை கண்களின் கீழே கருவளையத்தில் தடவி விடவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். தினமும் இதனை செய்து வரவும்.