உரையாடல்களை பதிவு செய்ததற்கான முக்கிய காரணம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –செவ்வாய்கிழமையன்று பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க 30 நிமிடங்கள் நீடித்த உரையொன்றினை ஆற்றினார். அதன்போது அதிர்ச்சிகரமான, திகைப்பூட்டும் வகையிலான பல்வேறு தகவல்களை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் உரையாடிய 07 பதிவுகள் தன்னிடம் உள்ளதாகவும் தனது உரையில் ரஞ்சன் தெரிவித்தார்.

“எனது தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்கப் போவதாக பிரதமரும் ஜனாதிபதியும் கூறியுள்ளனர். அதனைச் செய்யுங்கள், அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்க ஆவணங்களுடன் நான் வருவேன்,” என்றும் ரஞ்சன் இதன்போது தெரிவித்தார்.

தன்னால் கண்டறியப்படும் ஊழல், மோசடிகளை வெளிப்படுத்துவதற்கான சாட்சியங்களுக்காவே இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை தான் ஒலிப்பதி செய்ததாக பாராளுமன்றத்தில் கூறிய ரஞ்சன் ராமநாயக்க; தன்னிடமுள்ள குரல் பதிவுகளை நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“மோசடிகளுக்கு எதிரான எனது போராட்டத்தின் பொருட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள் வெளியானதால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்புக் கோருகிறேன்” என்றும் இதன்போது அவர் கூறினார்.

இதேவேளை, ரஞ்சனின் உரை குறித்து மனோ கருத்து தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க செவ்வாய்கிழமையன்று பேசியது போன்ற உரையை அதற்கு முன்னர் தான் ஒருபோதும் கேட்டதில்லை’ என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.