உலகிற்கே பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதி அல்-பாக்தாதி பலி?

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். இந்நிலையில், ஈராக்கில் நேற்று(11), அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க நிறுவனர் அபூ பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

அல்-பாக்தாதி பற்றியதோர் கண்ணோட்டம்..

வெளியில் அதிகம் முகம் காட்டாமல் இருந்த தீவிரவாதி அல்–பாக்தாதி மொசூல் நகர மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த வருடம் முதல் முறையாக கலந்து கொண்டு பேசினார். முதல் முறையாக வெளியான அவனது வீடியோ, இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவர் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்பட்டவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை அதிகமாக வெளிக்காட்டியது கிடையாது. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பார். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறினர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சமரா என்ற இடத்தில் கடந்த 1971–ம் ஆண்டில் பிறந்த இவர், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். கடந்த 2003–ல் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக் மீது போர் தொடுத்த போது, அங்குள்ள ஒரு மசூதியில் மதகுருவாக இருந்தார்.

அமெரிக்க படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சில சிறிய தீவிரவாத குழுக்களுக்கு அல்–பாக்தாதி தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. 2006–ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்–பாக்தாதி பின்னர் 2009–ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். பக்கா என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ முகாமிலும் சிலகாலம் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். விடுதலைக்கு பிறகு ஒசாமா பின்லேடனின் அல்–கொய்தா இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். அல்–கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011–ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டது அந்த இயக்கத்துக்கு பேரிடியாக அமைந்தது.

இதனால் கொதித்து எழுந்த அல்–பாக்தாதி, பழிக்குப்பழி வாங்கப் போவதாக அறிவித்தார். அதன்பிறகு ஈராக்கில் நடந்த சில தாக்குதல்களுக்கு அவரது தலைமையிலான குழு பொறுப்பு ஏற்றது அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. எதிரிகளை கொடூரமாக தாக்கி கொல்வதோடு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அதிபயங்கர போக்கை கொண்டவர் அல்–பாக்தாதி. இதனால் இவருக்கும், பின்லேடனின் மறைவை தொடர்ந்து அல்–கொய்தாவின் தலைமை பொறுப்பை ஏற்ற அல்–ஜவாஹிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிளவு அதிகரிக்கவே, அல்–ஜவாஹிரியை பின்பற்றப் போவது இல்லை என்றும், இறைவனின் கட்டளையை பின்பற்றி நடக்கப்போவதாகவும் அறிவித்த அல்–பாக்தாதி, ஈராக்கையும், சிரியாவையும் ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்தை தொடங்கினார். தற்போது இந்த இயக்கத்திடம் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் பணமும், சொத்துகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. உலக நாடுகளுக்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்திய தீவிரவாத இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகும். அல்-பாக்தாதியின் உயிரிழப்பு ஈராக் படைக்கு முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த வான்வெளி தாக்குதலில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த அல்-பாக்தாதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்றும் ஈராக் ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்பட்டாத நிலையில், கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் அல்-பாக்தாதி இல்லை என்று நகர மக்களும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அல்-பாக்தாதி கொல்லப்பட்டிருந்தாலும், அது ஐ.எஸ் இயக்கத்தை பாதிக்காதென்றும், ஆயிரக்கணக்கினாலான பாக்தாதிகள் எங்களிடம் இருக்கிறார்கள் என்றும் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.