அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனல்ட் ட்ரம்புக்கு உலகம் குறித்து தெரியாது என ஒபாமா தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுபாதுகாப்பு உச்சி மாநாட்டுக்குப் பின்னர் ஒபாமா தெரிவித்துள்ளதாவது, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (ட்ரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது .
நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செய்கிறோம் என்பது பிற உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
சில நாடுகளில் தங்கள் அரசியலை விழாக் கொண்டாட்டமாகக் காண்கின்றனர். ஆனால், அத்தகைய நாடுகள் கூட அமெரிக்காவிடமிருந்து தெளிவையும் நிதானத்தையும் எதிர்பார்க்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
எனவே, அவர் வகுக்கும் அயல்நாட்டுக் கொள்கைகள் அமெரிக்க பாதுகாப்பு, வளங்கள் ஆகியவற்றுடன் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கைகள் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் செய்த தியாகங்களின் மீது கட்டமைக்கப்பட்டது.
எனவே, இத்தகைய முக்கியத்துவங்களை அறியாத ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு விரும்பத்தகாதவர் என கூறியுள்ளார்.