உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜிடோ மரணம்

1958 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த நடுகள வீரர் ஜிடோ (வயது 82) கடந்த ஆண்டு பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மரணம் அடைந்ததாக ஆஸ்திரேலிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கதாநாயகன் பீலேவுடன் இணைந்து ஆடிய ஜிடோ 1962-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்தவர் ஆவார். ஓய்வுக்கு பிறகு சான்டோஸ் கிளப்பில் இணைந்து பணியாற்றிய ஜிடோ, நெய்மார் உள்பட இளம் வீரர்கள் பலர் உருவாக காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிடோ மறைவுக்கு பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஜிடோ குறித்து வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக்கு அவர் செய்த உதவிக்காக நன்றி செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.