கிறிஸ் கெய்ல் என்றாலே அவரது அதிரடி சிக்சர்களுக்குப் பிறகு, பெண்களுடன் அவர் பார்ட்டி கொண்டாடும் படங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சிறுவயதில் தான் ஒரு ‘கூச்ச சுபாவி’ என்கிறார் இந்த ஜமைக்கா புயல்.
கெய்ல் எழுதி சமீபத்தில் வெளியாகி இருக்கிற அவரது சுயசரிதையான ‘சிக்ஸ் மெஷின்’ (‘நான் கிரிக்கெட்டை விரும்பவில்லை… நேசிக்கிறேன்’ என்ற அடிக்குறிப்புடன்) அவரது ஆட்டத்தைப் போலவே பல சுவாரசியமான விஷயங்கள் புதைந்திருக்கின்றன.
அவற்றில், உலக பியூட்டிகளுடன் அவர் அடித்த லூட்டிகளும் அடக்கம் என்பதை சொல்லத் தேவையில்லை.
‘சிக்ஸ் மெஷின்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்…
நான் ஜமைக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் லியோன் கேரிக் என்ற கிறுக்குப் பையனுடன் கிரிக்கெட் ஆடினேன். அவன் பார்ட்டிகளுக்குப் போக ஆசைப்படுவான். ஆனால் எங்களுக்கு நல்ல ஆடை வாங்கவோ, ‘தண்ணி’க்கோ காசிருக்காது. எங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருந்ததால் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். எங்களுக்கிடையிலான ஒற்றுமைகளில் ஒன்று, இருவருமே பெண்களைக் கண்டாலே தெறித்து ஓடுவோம்.
கையில் துட்டு இல்லை என்றாலும், எங்களுக்கு ஜாலிக்கு பஞ்சமில்லை. நாங்கள் ஜமைக்காவுக்காக துவக்க ஜோடியாக ரன்கள் குவிக்கக் குவிக்க, திறக்காத நைட் கிளப் கதவுகள் எங்களுக்குத் திறக்க ஆரம்பித்தன.
பார்ட்டி தாண்டி, பெண்களை நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்கும் அழைத்துப் போக ஆரம்பித்தோம். அங்குள்ள ரூம்மேட்டிடம், ‘தோழா… ஒரு அரைமணி நேரம் நாங்கள் தனியாக இருக்கிறோம்’ என்போம். நல்ல ரூம்மேட்டாக இருந்தால், ‘ஓகே… என்ஜாய் நண்பா…’ என்று வெளியே போய்விடுவார்கள். சிலவேளைகளில் சிக்கலான ரூம்மேட்கள், அறையை விட்டு அசைய மாட்டார்கள். அப்போதெல்லாம் வேறு ‘ஐடியா’ கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
ஒரு கட்டத்தில் எங்கள் வாழ்க்கை முழுக்க ‘பார்ட்டி’யானது. நண்பன் லியோன், பெண்களை வளைப்பதில் கெட்டிக்காரன். நானோ நன்றாகப் பேசுவேன். அந்தக் காலகட்டத்திலும் எனக்கு முழுமையாக கூச்சம் விலகிவிட்டதாகக் கூற முடியாது. ஆனால் கொஞ்சம் ‘சரக்கு’ உள்ளே போனால் அதிரடி கெய்ல் வெளிப்பட்டுவிடுவான். அப்புறம், ஆட்டம், பாட்டம்… ஒரே கொண்டாட்டம்தான்!
ஒரே நேரத்தில் நான் இனிமையாகவும், கரடுமுரடாகவும் நடந்துகொள்வேன். பெண்களுக்கு அது பிடித்திருந்தது போலத்தான் தோன்றியது.
அடிப்படையில் பெண்கள் புகழ்ச்சிப் பிரியைகள். தாங்கள் எவ்வளவு அழகு என்று பிறர் சொல்லச் சொல்ல அதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆனந்தம். அந்தச் சூட்சுமத்தை நான் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். இஷ்டம்போல அள்ளிவிடுவேன். பெண்களைக் கவர அவர்கள் கோணத்தில் சிந்திக்கணும், அக்கறையாகப் பேசணும், அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கணும், அப்புறமென்ன, நினைத்ததெல்லாம் நடக்கும்!
ஒரு கட்டத்தில், என் மீது பாய்ந்து விழும் பெண்கள் மீது எனக்கு ஈர்ப்பில்லாது போய்விட்டது. அவ்வளவு சீக்கிரம் பெண் மடிந்துவிட்டால் அதில் சுவாரசியம் ஏது? இளமையில் வேறு விஷயம். கிடைப்பதை எல்லாம் அனுபவிக்கத் தோன்றும், சூடாக ரத்தம் பாயும் அந்த வயதில், சக்தி கொப்பளிக்கும், எல்லாமே புதிதாக, சாகசமாக இருக்கும். பார்ப்பதெல்லாம் களிப்பூட்டுவதாகத் தெரியும்.
எனது முதலாவது இங்கிலாந்து கிரிக்கெட் பயணம், 2000–ல் நடந்தது. அப்போது எனக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்பதால், ஜாலியாக கழிக்க நிறைய நேரம் கிடைத்தது. அந்த வகையில் மறக்க முடியாத பயணம் அது.
ஒரு கிளப்புக்கு போய் ஒரு சாம்பைன் பாட்டில் வாங்கிக்கொண்டு நின்றிருந்தால் போதும், எங்கிருந்தாவது ஒரு பெண் வந்து ஒட்டிக்கொண்டு விடுவாள். உர்செஸ்டர் தொடங்கி கார்டிப், நாட்டிங்காம், லீட்ஸ் என்று எங்கும் பார்ட்டி மஜாதான். ஒரு பெண்ணுக்கு உங்களைப் பிடித்துவிட்டால் போதும், தயங்கவே மாட்டார்கள், கிட்டவந்து கையைக் கோர்த்துவிடுவார்கள். அப்படித்தான் அந்தப் பயணம் முழுக்கப் போனது.
அடுத்து, ஆஸ்திரேலியா அடிலெய்டில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியில் நானும், வேறு சில இளம் திறமைசாலிகளான டேரன் கங்கா, ஜெர்மைன் லாசன், ராம்நரேஷ் சர்வான் போன்றோரும் பயிற்சி பெற கிங்ஸ்டன் போர்ட் அத்தாரிட்டி நிதியுதவி செய்தது.
ஆஸ்திரேலியாவில் அந்த கிரிக்கெட் காலம் அற்புதம். அங்கு பயிற்சி, போட்டிகள் எல்லாம் திட்டமிடப்பட்டு, தீவிரமாக நடக்கும். ஆஸ்திரேலிய அகாடமியை ராட் மார்ஷ் கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருந்தார். அங்கே என்னுடன் பயிற்சி பெற்றவர்களில், பின்னாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆன மைக்கேல் கிளார்க், அவரது நீண்டகாலத் தோழர் ஷேன் வாட்சன், நாதன் ஹாரிட்ஸ் போன்றோர் அடக்கம்.
நாம் ஒரு கிளப்புக்குள் நுழைந்தாலே, யாராவது ஒருவர் புஜத்தில் குத்துவார்கள். ‘யாருப்பா அது?’ என்று திரும்பினால், ஒரு பெண் கண் சிமிட்டுவாள். எனக்கு, ‘நடப்பதெல்லாம் நிஜம்தானா?’ என்றிருக்கும்.
ஒருமுறை நான் ஒரு பாருக்கு போய் ஆர்டர் செய்வதற்கு முன் பார் ஊழியர் எனக்கான ‘டிரிங்’கை எடுத்து வைத்தார். நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அதோ அந்தப் பெண்தான் உங்களுக்கு ஆர்டர் செய்தாள் என்றார் பார் ஊழியர். அப்போது ஆந்திரே ரிச்சர்ட்ஸ் என்னுடன் இருந்தான். இருவரும் ஆச்சரியத்தில் விசில் அடித்தோம். ‘ஆஸ்திரேலியான்னா இப்படித்தானாப்பா?’ என்று எங்களுக்குள் வியப்பாய் பேசிக்கொண்டோம்.
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பெண்களுக்கு கறுப்பு நிற ஆண்களைப் பிடிக்கும் போல தெரிகிறது. அங்கே நீங்கள் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், இடையில் அவள் பாத்ரூம் போனால் அந்த இடத்தை இன்னொரு பெண் வந்து பிடித்துக்கொள்வாள்.
…சிக்சர் மன்னர் கெய்ல், தனது புத்தகத்தில் பெண்களை பற்றிய இப்படிப்பட்ட பல ‘சிக்சர்களை’ பறக்கவிட்டிருக்கிறார்!