புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியுமென தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
“புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனியில் மார்ச் 12 இயக்கம் தேர்தல் வாக்காளர்களை தெளிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த அறிவூட்டல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வு நேற்று(07) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன;
தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறை அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் ஆணைக்குழு தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாதமையின் பெறுபேறுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றியும், சுயாதீனமாகவும் நடைபெறாமையே உள்ளூராட்சி சபை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான பிரதான காரணமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு முறையினால் கட்சிகளின் அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் மறைக்கப்பட்டு தனிநபர்களின் செல்வாக்கு மேலோங்கியது என்றும், புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மற்றும் தொகுதி முறை தேர்தல் என்பன நாட்டு மக்களின் வெற்றி என ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினை நாட்டின் மாற்றத்திற்கான யுகமொன்றின் ஆரம்பம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 18 ஆவது திருத்தத்தின் ஊடாக இந்நாட்டின் அரசியலமைப்பில் மன்னராட்சி போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே 19 ஆவது திருத்தத்தினை மேற்கொள்ள நேர்ந்தது எனவும் நினைவுகூர்ந்தார்.