பக்கசார்பாக நடத்தப்படும் மின்னல் நிகழ்ச்சியை தேர்தல் ஆணையாளர் தடைசெய்ததை அடுத்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாமல் குழப்பிப் போன ஜே.ஶ்ரீரங்காவினால் தற்போது எதிரொலி என்ற பெயரில் புதிய ஓர் நிகழ்ச்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்போது, பின்வரிசை ஆசனங்களில் பொதுமக்கள் என்ற போர்வையில் ரங்காவிற்கு வேண்டப்பட்ட ஒரு சிலர் மட்டும் அழைத்துவரப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதனைத் தவிர நிகழ்ச்சியில் விருந்தினராக தானே அமர்ந்துகொண்ட ஶ்ரீரங்கா, அடுத்த ஆசனத்தில் செந்தில் தொண்டமான் என்ற கிளிப்பிள்ளையை அமர வைத்து நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.
இதில் மிக முக்கியமாக ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் அறிவிப்பாளர்களே அன்றி அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்ல என்பது மிகத் தெளிவாக அவர்களின் போக்கில் காணக்கூடியதாக இருந்தது.
அதில் ஒரு ஊடகவியலாளர் (அறிவிப்பாளர்) ஜனாதிபதி மைத்திரிபால சேனாநாயக்க என்று குறிப்பிடுகிறார். ஜனாதிபதியின் பெயரைக் கூட முழுமையாக தெரிந்துகொள்ளாத அறிவிப்பாளர் ஒருவரையே ஊடகவியலாளர் என்ற பெயரில் அமர வைத்து ரங்கா எழுதிக் கொடுத்த கேள்விகளைக் கேட்கவைப்பது புலப்படுகிறது.
அத்துடன், அந்த அறிவிப்பாளர் ஜனாதிபதியின் பெயரை ஒருவேளை தவறுதலாக உச்சரித்திருந்தாலும் ”மன்னிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன” என்று குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு ஜனாதிபதியின் பெயர் கூட தெரியாததால் அவர் மைத்திரிபால சேனாநாயக்க எனக் குறிப்பிட்டு பின்னர் சமாளித்து மைத்திரிபால எனக் கூறி, எழுதிவைத்த கேள்வியைத் தொடர்ந்தார். (காணொளி 19:08)
அத்துடன், நிகழ்ச்சியில் முதல் கேள்வியை எழுப்பிய பெண் அறிவிப்பாளர் பிரஜைகள் முன்னணி சார்பாக பெண்கள் 11 பேர் களமிறக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மின்னல் நிகழ்ச்சியை திட்டமிட்டு, சொல்லிக் கொடுத்து ஒளிப்பதிவு செய்த விதம் பகிரங்கமான பின்னர் இதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட தயாரான ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த பெண் அறிவிப்பாளர், இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
ஶ்ரீரங்காவின் பிரத்தியேக இணைப்பாளர் பணியை மேற்கொண்டுவரும் இந்த பெண் ஊடகவியலாளரே எதிரொலி நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் என்ற கதிரையில் அமர்ந்திருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் திட்டமிட்டு, கலந்தாலோசித்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என ரங்காவினால் எழுதிகொடுக்கப்பட்ட கேள்விகளையே இந்த அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியில் கேட்டிருந்தனர்.
அர்ப்பணிப்பான, சேவை நோக்குடனான, ஜனநாயக ரீதியான ஊடகவியலாளர் என்ற அந்த மகத்தான பணியை முன்னெடுக்க வேண்டிய இந்த ஊடகவியலாளர்களும், அறிவிப்பாளர்களும், ரங்காவின் கைகூலிகளாக மாற்றப்பட்டுள்ளமை ஊடகத்துறைக்கு வந்துள்ள இழுக்கை எடுத்துக்காட்டுகிறது