ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே பணி நீக்கப்படும் சாத்தியம்..?

ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே பணி நீக்கப்பட உள்ளதாக  முதன்மைப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய அரசாங்கத்தின் ஊடகக் கொள்கைகளுக்கும், தமது பணிகளுக்கும் புறம்பான வகையில் ஊடக அமைச்சின் செயலாளர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே ஊடக அமைச்சின் செயலாளர் பணி நீக்கப்படவுள்ளார்.

ஊடக அமைச்சின் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் வெளியிட்ட முதலாவது ஊடக அறிக்கையிலேயே சர்ச்சை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சி என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் நிமால் போபகே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையினால் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கமே மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கியது. இந்த விடயம் குறித்து சிரேஸ்ட அமைச்சர்கள் தங்களது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

பெரும்பாலும் ஊடக அமைச்சின் செயலாளர் விரைவில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடக அமைச்சின் செயலாளரை அண்மையில் அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் விளக்கம் கோரி அறிவுரைகளையும் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.