சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அரசு பதவிகளில் அங்கம் வகிப்போரின் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் விளைவாக பல்வேறு உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சீன விளையாட்டுத்துறை துணை மந்திரி சியாவோ டியான் மீதும், சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியது தொடர்பாக ஊழல் விசாரணை நடத்தப்படும் என கம்யூனிஸ்டு கட்சியின் ஊழலுக்கு எதிரான அமைப்பான ‘ஒழுங்கு நடவடிக்கைக்கான மத்திய ஆணையம்’ கடந்த மாதம் அறிவிப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் அவர் துணை மந்திரி பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை சீன மனித வளத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக விரிவான தகவல் எதையும் அரசு வெளியிடவில்லை.
மேலும், வருகிற 2022-ம் ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சீனா விருப்பம் தெரிவித்து இருந்தது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சீன ஒலிம்பிக் கமிட்டியில் சியாவோ டியானும் இடம் பெற்றிருந்தார்.
இந்த போட்டிகள் நடத்தும் நாடு குறித்த அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வருகிற 31-ம் திகதி வெளியிடும் நிலையில், அவர் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
(riz)