ஊழியர்களின் உரிமைகளைப் கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை அனைத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து அரைநேர வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊழியர்கள் நிதியம் குறித்து வரவு செலவுத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை சீர் செய்து மீண்டும் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் முழுநேர வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்த அரைநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலங்கை ஊழியர் சங்கம், தாதியர் சங்கம், அரச மற்றும் தனியார் போக்குவரத்து ஊழியர் சங்கம், ரயில்வே ஊழியர் சங்கம், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிலாளர் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.