ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்…

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக பயன்படுத்துவதற்கு தொழிற்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஊழியர்கள் மற்றும் வேலை செய்வோரின் விபரங்களை உள்ளடக்கிய வகையில் திணைக்களத்தின் கணனி தரவுகள் புதிதாக தயார் செய்யப்பட்டு வருவதுடன் புதிய அங்கத்துவ இலக்கம் இவ்வருடம் ஜுன் மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதி அங்கத்துவ இலக்கங்கள் பல உண்டு. இதனால் நிதியத்தின் பயன்களை பெற்றுக்கொள்ளும் பொழுது பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து தமது பணத்தை அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக தொழிற்திணைக்களம் ஆட்பதிவுத்திணைக்களத்துடன் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளவதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.