ஊவா மாகாண சபைக்கு முன்பு பதற்ற நிலை உருவாகியுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாண சபை அமர்வு இன்று(25) இடம்பெறவிருந்த நிலையில், கட்சி தாவிய மாகாண சபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர்.
ஊவா மாகாண சபைக்குள் கட்சி தாவிய கணேசமூர்த்தி உள் நுழைகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான உபாலி சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அம்பியூலன்ஸ் மூலம் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஊவா மாகாணசபை வளாகத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றம் நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma