ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணியாக ஆஜராகியுள்ள சட்டத்தரணி திலிப் பீரிஸை, அதிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று கலந்துரையாடல்களை நடாத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து சாட்சியங்கள் உள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி திலிப் பீரிஸ், ஹோமாகம நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஹோமாகம பொலிஸார், மிரிஹான பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இந்த குறித்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நடாத்தவில்லை என சட்டத்தரணி திலிப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணி திலிப் பீரிஸ் தொடர்ச்சியாக பாதுகாப்பு பிரிவினர் மீது குற்றம் சுமத்துகின்றமையினால், அவரை அந்த வழக்கிலிருந்து நீக்குமாறு இராணுவ உயர் அதிகாரிகள் சட்டமா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.