எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் இன்று(21)..

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று(21) கூடவுள்ள பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை, தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றம் உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டதால், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியானதா என கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இறுதிப் பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட அனைவரும், தொடர்ந்தும் தமது கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.