திருவாரூர் தொகுதியில் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ள இடைத் தேர்தலில் தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலினை களம் இறக்க ஆலோசனை நடந்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், விருப்ப மனு கொடுப்பவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். அன்றே தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதும் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் களம் இறக்கலாம் என்ற யோசனை தி.மு.க. மூத்த தலைவர்கள் முன் எழுந்து உள்ளது. உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடித்து மக்கள் மனதில் அறிமுகமாகி இருப்பதால் அவருக்கு திருவாரூர் தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர் என்பதால் இப்போதே உதயநிதிக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்றும் சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.