ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று 5 1/2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அர்ஜூன் அலோசியசின் பேர்ச்சுவல் ரெசரிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான, வோல்ட் அன் றோ அசோசியேட் நிறுவனத்திடம் இருந்து, ஒரு மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் நேற்றுக் காலை முன்னிலையான தயாசிறி ஜெயசேகரவிடம் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தயாசிறி ஜெயசேகர,
“ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக என்னிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறினேன்.
இயல்பான முறையில் இந்த விசாரணை இடம்பெற்றது, வரும் நாட்களில், பேர்ச்சுவல் ரெசரிஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றுக் கொண்ட பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கிறேன்..” என கூறியுள்ளார்.