(FASTNEWS | COLOMBO) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யும் வரையில் தான் தனது உயிர் மூச்சினை இழுத்துக் கொண்டிருப்பதாக அவரதுதாய் டப்ளியு. டீ. குணவதி ஊடக செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் தெரிவிக்கையில்;
‘எனக்கு 80 வயதாகிறது.. எனது சின்னப் பையன் வரும் வரையில் எனது உயிர் மூச்சினை இழுத்துக் கொண்டிருக்கிறேன். இரவு பகலாக காலம் நேரமின்றி புத்த பெருமானிடம் வேண்டுவதெல்லாம் எனது மகனை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றே…”
“..இம்முறை ஸ்ரீ பாத யாத்திரைக்கும் சென்று வந்தேன். என்னால் மழை ஏற முடியாது என்றாலும், எனது மகனுக்காக கால் வலியினையும் தாங்கிக் கொண்டு ஏறினேன்.. (ஞானசார தேரரின் புகைப்படத்தினை காண்பித்து..) இதில் இருப்பது எனது சின்னப் பையன்.. களவு, பொய், கொள்ளை இவற்றின் குற்றச்சாட்டில் அல்ல சிறைக்கு சென்றான், நாட்டிற்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அது எனக்குப் பெருமையே..”
“.. எனது பிள்ளைகளின் தந்தை 2003ம் ஆண்டு திடீரென உயிரிழந்தார். அவர் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. எனக்கு ஆறு பிள்ளைகள் மகன்கள் ஐவர், ஒரு மகள். எமது தேரர் தான் எனது கடைக்குட்டி..”
“சின்னப் பையன் பாடசாலை செல்லும் காலங்கள் கூட அநியாயத்தினை தட்டிக்கேட்பார். இதனால் பாடசாலை பிள்ளைகளுடனும் சண்டைபிடித்து வந்துள்ள தருணங்கள் ஏராளம்.. கடைக்குட்டியில் அதி சுட்டி என்றே கூறலாம்..”
“கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் தான் சின்னப் பையன் பயின்றார். நான்கு ஐந்தாம் வகுப்புகளில் தான் துறவியாக வேண்டும் என்று கூற அவரது அப்பாவும் சரி என்றார்..”
1975ம் ஆண்டு மார்ச் 04ம் திகதி பிறந்த ஞானசார தேரருக்கு நுவன்சிரி குமார என கிராம விகாரையின் தலைமைத் தேரர் பெயர்சூட்டியதாகவும் ஞானசார தேரரின் தாயார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.