“நல்லாட்சியின் டொப் டென் திருடர்கள்” என்ற பட்டியலை கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே மூன்று பேரின் பெயர்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், நான்காவது நபரின் பெயர் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தவொரு ஊழல் அல்லது மோசடியுடன் தான் தொடர்புபடவில்லை என்பதனால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என, அமைச்சர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கேட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “நல்லாட்சியின் டொப் டென் திருடர்களாக பெயரிடப்பட்டுள்ள பட்டியலின் அடுத்த இலக்கமான 4ஆம் இலக்க அமைச்சரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ஜுன் மற்றும் திருவுக்கு அதிவேக வீதி ஒப்பந்தத்தை வழங்குமாறு தனக்கு உயர் அரசியல்வாதி ஒருவரினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக, குறித்த அமைச்சர், மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வினவிய போது அவர் இந்த விடயத்தை உறுதி செய்தாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் தற்போது வரையில் பெயரிடப்பட்டுள்ள “நல்லாட்சி டொப் டென்” பட்டியலில் முதலாவது நபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளார். இரண்டாவது நபராக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். மூன்றாவது நபராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பெயரிடப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
அடுத்த இலக்கத்தில் உள்ள அமைச்சரை எதிர்வரும் நாட்களில் வெளியிடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் மஹிந்தானந்த உட்பட குழுவினர் ஆயத்தமாகின்றனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பிரதான 10 பேர் மற்றும் ஏனைய அனைவரும் யார் என்பதனை வாரத்திற்கு ஒருமுறை வெளிப்படுத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ராஜபக்ச ஆட்சியில் பாரிய ஊழல் மோசடி மேற்கொண்டவர்கள் தற்போது வரையில் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பில் நல்லாட்சியின் பிரதானிகளுக்கு சிவில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும், முன்னாள் ஜனாதிபதியின் பணிப்பாளர் சபை பிரதானி காமினி சேனாரத்ன தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை அவர்களின் கடுமையான அதிருப்திக்கு காரணமாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர், அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்படியிருப்பினும் கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நிறைவு செய்து வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை 63 எனவும், இவை தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.