எரிபொருள் கொள்வனவிற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதிக்கு கடிதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நீண்டகால கடன் வசதியில் எரிபொருள் கொள்வனவு செய்யும் நோக்கில் ரஷ்யாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஒன்பது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அரசாங்கம் பேச்சு வார்த்தைகளைப் பின்பற்றத் தவறினால், மக்களுடன் ஒன்றிணைந்து, தற்போதைய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்முதல் செய்ய தற்போதைய நிர்வாகத்தை கட்டாயப்படுத்த தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு ரஷ்ய அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.