எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படாது – அரசு தீர்மானம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரம் உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ம் வருடம் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலும் இதுபோன்ற ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் எதிர்பார்த்த பலன் கிட்டியிருக்கவில்லை.

இன்னும்,எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதாயின், ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கும் அவ்வாறான ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் தற்போதைக்கு சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகுறைந்துள்ள போதிலும் திடீரென்று அதன் விலை உயர்வதற்கான சாத்தியங்கள் அதிகப்படியாயுள்ளன. அவ்வாறான நிலையில் எரிபொருளுக்கான விலையை குறைப்பது நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்றும் அமைச்சர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் உருவாக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருளின் விலையையும் தற்போதைக்கு குறைப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.