எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை…

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்தங்களின் பிற்பாடு, எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதால், நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்து கொள்ள வேண்டும் என சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின் வீடுகளுக்குச் செல்லுமாறும் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக 011-263 5675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்கள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாறிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வெள்ளத்திற்குட்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது