எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த வாரம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி கட்சித் தலைவர்களுக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.
எனினும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இரு பிரதான கட்சியின் அங்கத்தவா்கள் இந்தக் அறிக்கையில் கையொப்பமிடாத காரணத்தால் இதை ஏற்க முடியாதென நேற்றையதினம் கூறி அதனை ஏற்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பம் இடாமை காரணமாக இந்த அறிக்கை சட்டத்திற்கு விரோதமானது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் தலைவர் அசோகா பீரிஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில், பெரும்பான்மையானவர்கள் கையொப்பமிட்டிருப்பதால், இந்த அறிக்கை சட்டரீதியாகச் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குழு அங்கத்தவர்களுக்கும் அறிக்கையின் பிரதி வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் ஒரு பிரதி விரைவில் அமைச்சருக்கும் வழங்கப்படுமெனவும் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.