ஏமனில் இருந்து வீசப்பட்ட 7 ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு – ஒருவர் உயிரிழப்பு…

சவுதி அரேபிய தலைநகரை குறிவைத்து ஏமன் நாட்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை சவுதி இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதில் ஏவுகணையின் சிதைவுகள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கு பழி தீர்க்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது, சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து சவுதி அரேபியாவை நோக்கி 7 ஏவுகணைகளை எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவற்றில் 3 ஏவுகணைகள் தலைநகர் ரியாத்தை குறிவைத்தும், 4 ஏவுகணைகள் காமிஸ் முசைத், ஜிஷான், நஜ்ரான் ஆகிய நகரங்களை குறிவைத்தும் வீசப்பட்டன.

ஆனாலும் இந்த 7 ஏவுகணைகளையும் சவுதி அரேபிய படையினர் நாடுவானிலேயே இடைமறித்து, அழித்தனர். இதில் ரியாத் மீது வீசப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது, ஏவுகணையின் சிதைவுகள் அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.