ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழப்பு…

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக ஹூடேய்டா துறைமுகம் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது.