ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

ஏடன் நகரில் ஏமன் நாட்டு  பிரதமர் தங்கியிருந்த அல்-கஸ்ர் என்ற ஓட்டல் மீது இன்று அதிகாலை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக சனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் இருந்து காலேத் பஹா உயிர் தப்பினாரா? என்பது பற்றிய தகவல்கள் தெளிவுப்படுத்தப்படவில்லை.

ஏமன் நாட்டில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இது தீவிரமடைந்து உள்நாட்டுப் போராக மாறி பலரது உயிரை பலி வாங்கி வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவி அளித்தது.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். பின்னர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்று அந்நாட்டில் தஞ்சம் அடைந்தார்.

தனது ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியா அரசிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ம் திகதியில் இருந்து வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.

போராளிகள் வசமிருந்த சனா, ஏடென் உள்ளிட்ட முக்கிய நகரங்களை அரசுப்படைகள் மீட்டன. இந்த உள்நாட்டுப் போரின் விளைவாக ஏமன் தலைநகரான சனா, துறைமுகப்பட்டினமான ஏடென் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குண்டுவீச்சில் இடிந்து தரைமட்டமாகி, மண்மேடாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில், ஆறு மாதகால தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு ஏமன் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதி கடந்த மாதம் 22-ம் திகதி தனது தாய்நாட்டுக்கு திரும்பினார். சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் ஏடென் நகரில் உள்ள விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் சனாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு செல்லவில்லை. எங்கே தங்கியுள்ளார்? என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், பாதுகாப்பான இடத்தில் அதிபர் பத் ரப்போ மன்சூர் ஹாதி தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இக்குறித்த தாக்குதலில் இருந்து காலேத் பஹா உயிர் தப்பினாரா? என்பது பற்றிய தகவல்கள் தெளிவுப்படுத்தப்படவில்லை.
எனினும், அவர் தங்கியிருந்த ஓட்டலின் ஒருபகுதி தாக்குதலால் தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும், காயமடைந்த பலர் பலியாகியிருக்கலாம் எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

(riz)