ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, தொலுவ, உடுதும்புர மற்றும் உடப்பலாத்த பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.

இரத்தனபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஒப்பநாயக்க, குருவிட்டை, பலாங்கொடை, கஹவத்தை, கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா – கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, இங்கிரிய, தொடாங்கொடை மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுள் நுவரெலியா மாவட்டத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நுவரெலியா – டன்ஹில் தோட்டத்திலும், லக்ஸபானயிலும் 244 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.