இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களும்,போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் குற்றஞ் சுமத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விடாது முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ”மஹிந்த தரப்பு” தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும,கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தொன்றை மையப்படுத்திய முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இந்த அறிக்கையின் ஊடாக 40 இலங்கையர்கள் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், ”இந்த அறிக்கையிலுள்ள பெயர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள் என ஐ.நா.வின் மனித உரிமையாளர் கூறினார்” என்று சொல்ஹெய்ம் கூறியதாக டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திட்டமொன்று உள்ளது என்றும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு ஐ.தே.க. எண்ணியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.