ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
மேலும், குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன் பிசிசிஐ அமைப்பில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியை இழந்தார்.
தற்போது, லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இதில் பிசிசிஐ விதிமுறைகளிலும் மாற்றம் வரலாம்.
பெரும்பாலும் இந்த இரு அணிகளுக்கும் அதிகபட்ச அளவில் அபராத தொகை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 வீரர்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(riz)