24 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு பிரான்சில் நடக்கிறது. இதற்கான தகுதி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் கட்டாயம் வென்றாக வேண்டிய சிக்கலுடன் நேற்று முன்தினம் செக்குடியரசை எதிர்கொண்ட நெதர்லாந்து அணி 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.
ராபின் வான் பெர்சியின் சுய கோல், நெதர்லாந்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் மூன்று முறை உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய அணியான நெதர்லாந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத்தது. நெதர்லாந்து அணி, 1984-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டிக்கு தகுதி பெறாமல் போவது இதுவே முதல் முறையாகும்.