ஐஸ்கிரீம் இல்லாததால் நின்ற திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் இல்லாததால் இருவீட்டார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருமணம் நின்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை மாலை நடந்தது. அப்போது நடந்த விருந்தில் மணமகன் வீட்டார் சிலர் சாப்பிட சென்றபோது, ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, காவல்நிலையம் வரை சென்றது. அப்போது அங்கு வந்த காவலர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி மணமகன் உறவினர்களில் பெண்கள் உள்பட பலர் போலீசார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக மதுரா பகுதி காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, மணமகன் வீட்டார், மணமகளை அழைத்துச் செல்லாமல் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.