முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தோடு பார்த்து, ஒதுக்கி வைக்க கூடாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அமெரிக்காவுக்குள் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்-பும் கூறியுள்ள நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கொதித்து எழ வேண்டும் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜே ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து டல்லெஸ் பகுதி முஸ்லிம்கள் சங்கத்தின் சார்பில் வடக்கு விர்ஜினியாவில் உள்ள இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற தீவிரவாதத்துக்கு எதிரான கருத்தரங்கில் பேசிய ஜே ஜான்சன், ‘கடல்கடந்து வாழும் உங்கள் (இஸ்லாமிய) சமுதாய மக்களை குறிவைத்து ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தீவிரவாதம் என்ற புதைக்குழிக்குள் உங்கள் குடும்பங்களை சேர்ந்த வாலிபர்களை தள்ள இந்த இயக்கங்கள் முயன்று வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்தும் எங்களுக்கு உதவிட நீங்கள் (இஸ்லாமியர்கள்) முன்வர வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கொதித்து எழ வேண்டும்’ என்றார்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய இம்மையத்தின் தலைமை இமாமான முஹம்மது மஜித் பேசுகையில், ‘ஐ.எஸ். தீவிரவாதிகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் ஓடி, ஒளியவும் போவதில்லை. இணையதளங்களின் வழியாக முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத வலைக்குள் வீழ்ந்துவிடாதபடி தொடர்ந்து கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்களும் இணைந்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.