ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் இந்திய அணி ‘நம்பர்–2’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி 115 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ‘உலக சாம்பியன்’ ஆஸ்திரேலியா (129 புள்ளி) முதலிடத்தில் உள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேச அணி 96 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் வரும் 2017ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இடத்தையும் உறுதி செய்தது. மூன்றாவது, 4வது இடத்தில் முறையே நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் உள்ளன.
கோஹ்லி ‘நம்பர்–4’: பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி (4வது இடம்), ஷிகர் தவான் (7வது), கெப்டன் தோனி (9வது) ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா, தென் ஆப்ரிக்காவின் ஆம்லா உள்ளனர்.
புவனேஷ்வர் முன்னேற்றம்: பவுலர்களுக்கான ரேங்கிங்கில் ஒரு இந்திய வீரர் கூட ‘டாப்–10’ வரிசையில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வேக்கு எதிராக வேகப்பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர் குமார் 16வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். அஷ்வின் 11வது, முகமது ஷமி 13வது இடத்தில் நீடிக்கின்றனர். இந்தியாவின் அக்சர் படேல் (47வது இடம்), மோகித் சர்மா (51வது), ஹர்பஜன் சிங் (101வது) ஆகியோரும் முன்னேற்றம் கண்டனர். இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், நியூசிலாந்தின் பவுல்ட், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் உள்ளனர்.
(riz)