ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவராக டென்மார்க் நாட்டின் அரசியல்வாதி மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் முதல் ஓராண்டுக்கு இவர் அப்பதவி வகிப்பார்.
லிக்கெட்டாப்ட் தற்போது டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார். இதற்கு முன் அந்நாட்டின் வெளியுறவு மற்றும் நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார்.
தற்போது ஐ.நா. பொதுச் சபை தலைவராக உள்ள உகாண்டா நாட்டைச் சேர்ந்த சாம் குடேசாவின் பதவிக் காலம் முடிவதை தொடர்ந்து இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் 70-வது கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதன் தலைமை பொறுப்பை மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் ஏற்பார்.
ஐ.நா. பொதுச் சபையால் திங்கள்கிழமை இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட உடன் பிரதிநிதிகள் மத்தியில் லிக்கெட்டாப்ட் பேசினார்.
அப்போது அவர், “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்காக ஐ.நா. மேற்கொண்டுள்ள முயற்சி களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். மனித உரிமை களுக்கான செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிப்பேன்” என்றார்.