இலங்கை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போலவே, பெலாரஸ் நாட்டின் சர்வதிகார ஜனாதிபதியான அலெக்ஸ்சாண்டர் லுக்காஸ்ஹென்கோவும் ஐ.நா பொதுச் சபையில் தமது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு சென்றுள்ளனர் என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை இலங்கையின் உத்தியோகபூர்வ குழுவில் இணைத்தமை தொடர்பில் ஏற்கனவே இலங்கையின் அரசியலில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதில், சிறிசேனவை பொறுத்தவரை அவர் வெள்ளை மாளிகையில் உத்தியோகபூர்வ புகைப்படத்துக்கு தமது மகனை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் பெலாரஸ் ஜனாதிபதி தமது மகனையும் வெள்ளைமாளிகை அலுவலக புகைப்படத்தில் இணைத்துக்கொண்டார்.
அமரிக்க ஜனாதிபதி ஒபாமா, அவரின் மனைவி மிச்செய்ல் ஒபாமாவுடன் பெலாரஸ் ஜனாதிபதியும் அவரது மகன் 11 வயதான கொல்யாவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும் அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்விலும் தமது தந்தையுடன் அமர்ந்திருந்தார்.
ஏற்கனவே செப்டம்பர் 3இல் இடம்பெற்ற சீனாவின் இரண்டாம் உலகப்போர் நினைவு நிகழ்விலும் பெலராஸ் ஜனாதிபதி தமது மகனுடன் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கேற்றார்.
இது தமக்கு பின்னர் தமது மகனே நாட்டை ஆளவேண்டும் என்ற செய்தியை பெலாரஸ் ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(riz)

