ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ‘டைட்டில்’ அனுசரணையாக குளிர்பான நிறுவனமான பெப்சி இருக்கிறது. இதனால் 2013, 2014, 2015-ம் ஆண்டு போட்டிகள் ‘பெப்சி ஐ.பி.எல். தொடர்’ என்று அழைக்கப்பட்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பெப்சி நிறுவனம் 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.396 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிலையில் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பே ஐ.பி.எல். ஸ்பான்சரில் இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெடித்த அடுக்கடுக்கான சூதாட்டம், ஊழல் பிரச்சினைகளும், அதனால் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் எதிர்மறை தாக்கமும் ஐ.பி.எல். அமைப்புடன் தொடர்ந்து கைகோர்ப்பதில் ‘பெப்சி’ க்கு உடன்பாடு இல்லை.
எனவே ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐ.பி.எல். நிர்வாகத்திற்கும் ‘பெப்சி’ நிறுவனம் நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், பெப்சி நிறுவனத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘ஊழலற்ற நிர்வாகத்தை தருவேன்’ என்ற சூளுரையுடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பொறுப்பை ஷசாங் மனோகர் ஏற்ற நிலையில், ‘பெப்சி’யின் விலகல் முடிவு அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து வருகிற 18ம் திகதி மும்பையில் நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்தும், பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படுகிறது.
(riz)